நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தில் பதவிப் போட்டியால் புதுச்சேரி மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து மன்ற நிர்வாகி மற்றும் ஆதரவாளர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநில விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் தலைவர் மணிகண்டன். வயது 36. இவர் நேற்று இரவு 11 மணியவில் தனது இருசக்கர வாகனம் மூலம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது நெல்லித்தோப்பு மார்க்கெட் எதிரே பின் தொடர்ந்து வந்த 4பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து மணிகண்டனைச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உருளையன்பேட்டை போலீஸார் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்த மணிகண்டனை மீட்டு காவல்துறை வாகனத்தில் கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே மணிகண்டன் உயிரழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த உருளையன்பேட்டை போலீஸார், கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடத் தொடங்கினர்.
நெல்லித்தோப்பு சுப்பையா சாலையில் இருந்து மீன் மார்க்கெட் வரை தெருவிளக்கு எரியவில்லை. இந்த இருளைச் சாதகமாக்கி மணிகண்டனை மர்ம நபர்கள் கொலை செய்தது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட விஜய் சேதுபதி ரசிகர் மன்றத் தலைவர் மணிகண்டன் மீது ஏற்கெனவே மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட வெவ்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா ? அல்லது கொலைக்குக் கொலை பழி வாங்க கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கொலையான மணிகண்டனின் மனைவி விஜயகுமாரி உருளையன்பேட்டை போலீஸாரிடம் இன்று தந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, "நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத் தலைவரான மணிகண்டனின் உறவினர் ராஜசேகர். இருவருக்கும் இடையில் மன்றத்தில் பதவிப் போட்டியால் மோதல் நிலவியது. அதனால் ராஜசேகரை மன்றத்திலிருந்து மணிகண்டன் நீக்கியுள்ளார். அதையடுத்து ராஜசேகர் போட்டிக்காக ஆட்டுப்பட்டி பகுதியில் ரசிகர் மன்றத்தை நடத்திவருகிறார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கான சமாதானப் பேச்சுவார்த்தை அண்ணா திடலில் நேற்று நடந்துள்ளது.
அப்போது இரு மன்றமும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்த ஒரு உடன்பாடும் ஏற்படாத நிலையில் மணிகண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவரைப் பின் தொடர்ந்து சென்ற சிலர் வெட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் சிலரைப் பிடித்து விசாரித்து வருகிறோம்" என்று குறிப்பிட்டனர்.