தக்கலையில் தனது சொந்த மகள்கள் 3 பேர் உட்பட 4 சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர தாய் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். சிறுமிகள் 4 பேரும் மீட்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன. அங்கு போலீஸார் அந்த வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 2 அறைகளில் சிறுமிகளுடன் இருந்த ஆண்கள் 2 பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீஸார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில், ஒருவர் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவல் ஆய்வாளரின் கணவரான குளச்சல் பகுதியைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பதும், மற்றொருவர் தக்கலையைச் சேர்ந்த தொழிலாளி சுனில் என்பதும் தெரியவந்தது.
அங்கிருந்த லதா என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அவர்தான், தக்கலை மேட்டுக்கடையில் வாடகைக்கு வீடு எடுத்துள்ளார். அங்கு, தனது சொந்த மகள்களான கல்லூரி மாணவி, 12-ம் வகுப்பு மற்றும் 10-வகுப்பு படிக்கும் மாணவிகளையும், இளைய மகளின் பள்ளித் தோழியான மற்றொரு சிறுமியையும் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவது தெரியவந்தது.
4 சிறுமிகளையும் போலீஸார் மீட்டு, அவர்களை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இவர்கள் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பள்ளி செல்லும் தனது மகள்களையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய் லதா, பெண் காவல் ஆய்வாளரின் கணவர் ராஜ்மோகன் மற்றும் கூலித்தொழிலாளி சுனிலை கைது செய்தனர்.