மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மதுரவாயலில் மகன், மகளுடன் தனித்து வசித்த வழக்கறிஞர், கடந்த 2015-ம் ஆண்டு தனது மகன், மகளைக் கொன்று தலைமறைவான நிலையில், 5 ஆண்டுகள் போலீஸாரின் கடும் தேடலுக்குப் பின் சென்னையில் சிக்கினார்.
சென்னை மதுரவாயல் காவல் எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவி (56). இவர் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி மகேஷ்வரி. இவரும் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்துள்ளார்.
இவர்களுக்கு ஐஸ்வர்யா பிரியதர்ஷினி (13) என்ற மகளும், ஜெயகிருஷ்ணன் பிரபு (11) என்ற மகனும் இருந்தனர். ரவிக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் மனைவி மகேஷ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
கணவர் ரவியின் கொடுமை தாங்க முடியாமல் மகேஷ்வரி கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது இரு குழந்தைகளையும் கணவர் ரவியின் பொறுப்பில் விட்டுவிட்டு தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அதன் பின்னர்தான் குழந்தைகளுக்குக் கொடுமைகள் ஆரம்பித்தன.
தினமும் குடித்துவிட்டு வந்து குழந்தைகளை அடித்து உதைப்பது, வெளியில் விடாமல் வீட்டில் பூட்டி வைப்பது, அக்கம்பக்கத்தவருடன் பேசத் தடை விதிப்பது என்று ரவி தன் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தியுள்ளார். வழக்கறிஞர் என்பதால் அக்கம் பக்கத்தவர்களும் இதுகுறித்துத் தட்டிக் கேட்கவில்லை.
ஒரு கட்டத்தில் தனது குழந்தைகள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தியுள்ளார். வீட்டுக்குள்ளேயே அடைத்துவைத்து தான் வெளியே செல்லும்போது குழந்தைகள் இருவரையும் வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
மேலும், மனைவி மகேஷ்வரியை அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னுடன் வாழ அழைத்துள்ளார். அவர் வர மறுத்துள்ளார். வரவில்லை என்றால் குழந்தைகளைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் வழக்கறிஞர் தொழிலையும் சரியாக கவனிக்க முடியாமல், மதுப்பழக்கம் அதிகமான நிலையில் அவர் வசித்த வீட்டைக் காலி செய்யச் சொல்லி அதிகாரிகள் கேட்டு, அது வழக்காக நீதிமன்றத்தில் இருந்த நிலையில் ரவிக்கு எதிராகத் தீர்ப்பு வந்துள்ளது.
வீட்டைக் காலி செய்து அனைத்தையும் ஒப்படைக்கும்படி தீர்ப்பு வந்தது. ஒருபுறம் மனைவி வாழ வரவில்லை, மறுபுறம் இருக்கும் வீடும் தன்னை விட்டுப் போனது. வழக்கறிஞர் தொழிலிலும் வருமானமில்லை. குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய நிர்பந்தம். இதனால் விரக்தியின் உச்சத்துக்குச் சென்ற ரவி விபரீதமான முடிவை எடுத்தார். 2015-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தப்பிச் சென்றார்.
முதலில் குழந்தைகளைக் கழுத்தறுத்துக் கொன்றுள்ளார். பின்னர் கேஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது போல் சித்தரித்து, நாடகம் நடத்த முயன்றார். அவர் நினைத்தது நடக்கவில்லை. இதனால் அவர் காரை எடுத்துக்கொண்டு தலைமறைவானார்.
மூன்று நாட்கள் கழிந்த நிலையில் ஜூன் 3-ம் தேதி பூட்டப்பட்ட வீட்டிலிருந்து துர்நாற்றம் வரவே அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர். உடனடியாக அங்கு சென்ற மதுரவாயல் போலீஸார் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பெட்ரூமில் கட்டிலின் மீது இரண்டு குழந்தைகளின் உடல்களும் பாதி அழுகிய நிலையில் கிடந்ததைக் கண்டுபிடித்தனர்.
இது சம்பந்தமாக மதுரவாயல் போலீஸார் கொலை வழக்காகப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த தந்தை ரவியைத் தேடி வந்தனர்.
தனது குழந்தைகள் இருவரையும் கொலை செய்து விட்டுத் தலைமறைவாக இருந்த வழக்கறிஞர் ரவி தனது காரில் ஆந்திரா வழியாக ஒடிசா மாநிலத்துக்கு தப்பிச் சென்று அங்கு ரயில் நிலையத்தில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்த பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் டெல்லி தப்பிச் சென்றது தெரியவந்தது. டெல்லியிலிருந்து அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியாததால் போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. நெல்லையில் உள்ள அவரது வீட்டுக்கும் போலீஸார் பலமுறை சென்று விசாரணை நடத்தியும் அவரைப் பிடிக்க முடியவில்லை. இப்படியே 5 ஆண்டுகள் சென்றுவிட்டன. இந்நிலையில் சமீபத்தில் அவரது சொந்த ஊரில் அவரது நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் அங்கு சென்று போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர் அங்கு வந்து சென்றது தெரியவந்தது.
போலீஸார் சாமர்த்தியமாக ரவியின் உறவினர்களின் செல்போன் எண்களைச் சேகரித்து டிராக் செய்தனர். அதில் ரவி பேசியது தெரியவந்தது. தொடர்ந்து கண்காணித்தபோது ரவி செல்போனில் பேசுவதும், பின்னர் உடனே செல்போனை அணைத்து வைத்துவிடுவதும் தெரியவந்தது.
இந்நிலையில் போலீஸாரின் தீவிர முயற்சியில் ரவி பெரியமேட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நேற்றிரவு ரவி அங்கிருப்பதை உறுதி செய்த போலீஸார், அவரை வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
அந்த தங்கும் விடுதியில் ரவி கடந்த 9 மாதங்களாகத் தங்கி இருந்ததும் சென்னையில் சுற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கொலைக்குற்றவாளிகளின் சூழ்நிலையை விளக்கி அவர்களுக்காக வாதாடும் நிலையில் இருந்த வழக்கறிஞரே தனது மதுப்பழக்கத்தால் குற்றவாளியாக கூண்டில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொலை செய்த குற்றவாளியை 5 ஆண்டுகள் விடாமுயற்சிக்குப் பின் கைது செய்த போலீஸாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.