சென்னை, மதுரவாயலில் வீட்டில் கொள்ளையடிக்க வந்துவிட்டு திருடவும் முடியாமல், வெளியே போகவும் முடியாமல் மொட்டை மாடியிலேயே திருடன் உறங்கிய சம்பவம் நடந்துள்ளது.
மதுரவாயல் அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற நபர் வீட்டின் தண்ணீர் பிரச்சினை காரணமாக பிளம்பரை வரவழைத்தார். அவரும் பிளம்பரும் மொட்டை மாடிக்குச் சென்றனர்.
அப்போது மாடியில் மர்ம நபர் நடமாட்டம் இருந்ததையடுத்து அவர் யார் என்று பிரபாகரன் கேட்டார். இதனையடுத்து மறைந்திருந்த இளைஞர் மாடிப்படி வழியே கீழே ஓடியுள்ளார். ஆனால், அங்கு வெளியே செல்லும் கதவு பூட்டப்பட்டிருந்ததால் வேறு வழியின்றி மாட்டிக் கொண்டார்.
அவரை போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையின் போது திருட வந்தவர் பெயர் முத்தழகன் என்றும், வயது 23 என்றும் தெரியவந்தது. உணவு விநியோகம் செய்யும் வேலையில் இருந்ததாக முத்தழகன் விசாரணையில் தெரிவித்தார்.
கடன் தொல்லையால் அவர் திருடத் திட்டமிட்டுள்ளார். உணவு விநியோகம் செய்து வந்தபோது இந்த வீடு தனியாக இருந்தது தெரியவந்ததையடுத்து திருடத் திட்டமிட்டுள்ளார்.
திருட வந்த முத்தழகன் தனியாக இருந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறிக்குதித்து மொட்டை மாடியில் இறங்கியுள்ளார். கதவை உடைத்து வீட்டினுள் செல்ல முயன்றார். ஆனால், கதவை உடைக்க முடியவில்லை. இதனையடுத்து மொட்டை மாடியிலேயே தூங்கியுள்ளார். அவர் மது அருந்தியதாகவும் தெரியவந்துள்ளது.
பொழுது விடிந்ததும் மேலிருந்து கீழே வர முடியாமல் மாடியிலேயே உணவு, தண்ணீரின்றி முத்தழகன் அவஸ்தைப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.