'கலாட்டா நடக்குது. நகையைக் கழற்றி பையில் வைத்துக்கொண்டு போங்கம்மா' என்று திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையில் போலீஸ் போல் நடித்து, நகைகளை பேப்பரில் மடித்துத் தருவதுபோல் கவனத்தைத் திசைதிருப்பி 10 சவரன் நகைகளை மூதாட்டியிடமிருந்து 2 நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
திருட்டு, வழிப்பறி நடப்பதில் பலவகை உண்டு. இதில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, கத்தியைக் காட்டி வழிப்பறி என சென்னையில் அடிக்கடி நடப்பதுண்டு. இதுதவிர கவனத்தைத் திசைதிருப்பி வழிப்பறி செய்வதும் அதிகமாக நடக்கிறது. இந்த வகை திருடர்கள் சாமர்த்தியமாக பொதுமக்களிடம் பேசி கவனத்தைத் திசைதிருப்பி பணம், நகைகளைப் பறித்துச் சென்றுவிடுவார்கள்.
இவர்கள் ஜெயிலுக்குச் சென்றுவிட்டு வந்தாலும் இதேபாணியில்தான் திரும்பத் திரும்ப குற்றம் செய்வார்கள். இவர்கள் இலக்கு எல்லாம் வயதான பெண்கள், பணத்துக்காக ஆசைப்படுபவர்கள், பயந்த சுபாவம் உள்ளவர்கள்தான். அரசு அதிகாரிகள், போலீஸ், அரசு உதவியை வாங்கித் தருபவர்கள், திடீரென உதவிக்கு வருபவர்கள் போல் நடித்து கவனத்தைத் திசை திருப்பி நகை, பணத்தைப் பறித்துச் சென்று விடுவார்கள்.
நேற்றும் சென்னையில் இதேபாணியில் மூதாட்டி ஒருவரிடம் கவனத்தைத் திசைதிருப்பி, 10 சவரன் நகையைப் பறித்துச் சென்றுள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி வெங்கடாச்சலம் தெருவில் வசிப்பவர் சரோஜா (80). இவர் நேற்று காலை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சாமி கும்பிட பைகிராப்ட்ஸ் சாலை வழியாகச் சென்றுள்ளார்.
அப்போது முகக்கவசம் அணிந்தபடி வந்த ஒரு நபர், 'சரோஜாவிடம் பாட்டி எங்கே போகிறீர்கள்?' என்று கேட்டுள்ளார். 'கோயிலுக்குப் போறேன்' என்று சரோஜா கூற, 'அங்க நிற்கிறாரு பாருங்க எஸ்.ஐ அய்யா உங்களைக் கூப்பிடுகிறார்' என்று கூறியுள்ளார்.
உயரமாக காக்கி பேண்ட், வெள்ளைச் சட்டை அணிந்து நின்று கொண்டிருந்த நபரிடம் சரோஜா சென்று விவரம் கேட்க, 'என்ன பாட்டி உங்களுக்கு விஷயம் தெரியாதா? நேற்று இங்கதான் பெரிய கலாட்டா ஆச்சு, வயதான ஒரு அம்மாகிட்ட இருந்து நகையைப் பறிச்சுக்கிட்டு போய்ட்டானுங்க. அவனுங்கள தேடிக்கிட்டிருக்கோம், நீங்க என்னடான்னா இவ்வளவு நகைகளை போட்டுக்கிட்டு வர்றீங்க?' என்று கண்டிக்கும் தோரணையில் பேசியுள்ளார். சரோஜாவும் அந்தப் பேச்சை நம்பியுள்ளார்.
'சரி, நகையைக் கழற்றி பைக்குள்ள வச்சிக்கிட்டு போங்க. வீட்டுக்குப் போய் எடுத்து போட்டுக்கங்க' என்று கண்டிக்கும் தொனியில் கூறியுள்ளார். பின்னர் சரோஜா தனது கழுத்திலிருந்த 3 சவரன் செயினைக் கழற்ற வளையலையும் கழற்றச் சொல்லி இருக்கிறார்கள். 7 சவரன் வளையலையும் கழற்றி பையில் வைக்கப்போக, 'அப்படியே வைத்தால் நசுங்கிடப்போகுது. இந்த பேப்பரில் மடிச்சு பத்திரமா வச்சிக்குங்க' என்று பேப்பரைக் கொடுத்துள்ளனர்.
பின்னர் அவர்களே பேப்பரை மடித்துத் தந்து பையில் போட உதவியுள்ளனர். நன்றி சொல்லிவிட்டு சரோஜா நகர, அவர்களும் பைக்கில் ஏறிச் சென்றுள்ளனர்.
கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டில் வந்து பையில் பேப்பரில் மடித்து வைத்திருந்த நகைகளைப் பார்க்க சரோஜா முயன்றபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த பேப்பர் பொட்டலத்தில் சிறு சிறு கற்கள் இருந்தன. நகைகளைச் சாமர்த்தியமாக அவர்கள் பறித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து சரோஜா அளித்த புகாரின்பேரில் ஜாம்பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.