க்ரைம்

விருதுநகர் அருகே மது அருந்துவதைத் தட்டிக்கேட்ட மதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மது அருந்துவதைத் தட்டிக்கேட்ட மதிமுக பிரமுகர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(47).

மதிமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த அய்யலுசாமி மகன் மாரிமுத்து (20) என்பவர் அடிக்கடி இரவு வேளையில் மது குடித்து வந்துள்ளார்.

இதனை சிவக்குமார் கண்டித்துள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் சிவகுமார் வீட்டின் அருகே அமர்ந்து மாரிமுத்து மது அருந்தியுள்ளார். அதைப் பார்த்த சிவகுமார் மாரிமுத்துவை வழக்கம்போல் கண்டித்து எச்சரித்து அனுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து தனது வீட்டிற்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து சிவக்குமாரை பின்புறமாக அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிவிட்டார்.

இதில் பலத்த காயமடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் நகர் போலீஸார் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்த சிவகுமாரின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாரிமுத்துவை இன்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT