க்ரைம்

முன்னாள் விமானப்படை வீரர் வீட்டில் கொள்ளையடித்த 6 பேர் கைது; 16 அரை பவுன் நகை, ரூ.60 ஆயிரம் பறிமுதல்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முன்னாள் விமானப்படை வீரர் வீட்டில் கொள்ளையடித்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 16 அரை பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்தனர்.

சிங்கம்புணரி அருகே மருதிபட்டியைச் சேர்ந்த முன்னாள் விமானப்படை வீரர் நாகசுந்தரம் (70). அவரது மனைவி விஜயலட்சுமி (61), மகன் வெங்கடேஷ்வரன் (36), மருமகள் கவிதா (32) மற்றும் 2 பேத்திகளுடன் வசித்து வருகிறார்.

ஜூலை 22-ம் தேதி இரவு முகமூடி அணிந்திருந்த 6 பேர், அவரது வீட்டின் பின்புற சுற்றுச்சுவரில் ஏறி குதித்து உள்ளே நுழைந்தனர்.

அவர்களைத் தடுக்க முயன்ற வெங்கடேஷ்வரன் கையில் கத்தியால் குத்தினர். தொடர்ந்து குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.

இதனால் அனைவரும் பயந்து அமைதியாக இருந்தனர். இதையடுத்து பீரோவில் இருந்தது, கழுத்தில் அணிந்திருந்தது என 16 அரை பவுன் தங்க நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர்.

மேலும் கண்காணிப்பு கேமராக்களுடன் இணைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் ஹார்டிஸ்க், மொபைல்களையும் எடுத்துச் சென்றனர். எஸ்வி மங்கலம் போலீஸார் வழக்கு பதிந்தனர்.

சிவகங்கை எஸ்பி ரோஹித்நாதன் உத்தரவில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று இரவு ஜெமினிப்பட்டி அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த மதுரை மாவட்டம் கரையிப்பட்டியைச் சேர்ந்த மொட்டகோபுரத்து ராஜா (22), முத்துராமு (27), ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூரைச் சேர்ந்த பிருத்திவிராஜ் (22), கோட்டைராஜா (25), பாலக்குமார் (23), புளியூரைச் சேர்ந்த இளம்பரிதி (22) என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் முன்னாள் விமானப் படைவீரர் வீட்டில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த தனிப்படை போலீஸார் அவர்களிடமிருந்து 16 அரை பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT