க்ரைம்

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 87 ரவுடிகள் கைது: 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த 87 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிஐஜி சாமுண்டீஸ்வரி உத்தரவின் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தலைமையில் 6 ரவுடிகள் ஒழிப்புப் படைகள் உருவாக்கப்பட்டன. இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 87 ரவுடிகளை கடந்த ஒரு மாதத்தில் கைது செய்துள்ளனர்.

ஆட்சியர் உத்தரவு

மேலும், இவர்களில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தகசரங்கால் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (எ) வெட்டு அருண்(27), உள்ளாவூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்(25), பழந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த காதர் (எ) ஷேக் காதர்(32), பொய்யாகுளம் பகுதியைச் சேர்ந்த முருகன் (எ) பூனை முருகன்(31), பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்த மோகன் (எ) ஜெயமோகன்(27) ஆகிய 5 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டார்.

பிணையப் பத்திரம்

கடந்த 3 நாட்களில் 74 பேரை காஞ்சிபுரம், பெரும்புதூர் கோட்டாட்சியர்களிடம் ஆஜர்படுத்தி, ‘இனி எந்த தவறும் செய்யமாட்டோம்’ என்று நன்னடத்தை பிணையப் பத்திரம் பெற்று திருந்தி வாழ வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT