க்ரைம்

கொடைக்கானலில் சாலையில் பெண் தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம்: ஒருவர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் உடலில் பெட்ரோல் ஊற்றி பெண் ஒருவர் நடுரோட்டில் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தற்கொலைக்குத் தூண்டியதாக ஒருவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதி ஆடலூரை சேர்ந்த செல்வராஜ் மனைவி மாலதி(32). இவர் சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து கே.சி.பட்டியை சேர்ந்த சதீஷ்(30) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளார்.

இந்நிலையில் சதீஷ் வேறொரு பெண்ணை சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு மாலதியுடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதையடுத்து மாலதி, சதீஷ் வீட்டின்முன்பு நின்றுகொண்டு நியாயம் கேட்டுள்ளார்.

அப்போது சதீஷ் வீட்டினர் இவரை அவமதிக்கவே தான் கொண்டுசென்ற பெட்ரோல் கேனை உடலில் ஊற்றி திடீரென தீவைத்துக்கொண்டார். தீ மளமளவென பற்றி எரியவே சாலையின் நடுவே தீக்காயங்களுடன் அலறியபடி மாலதி இறந்தார்.

அப்பகுதியின் நின்றுகொண்டிருந்த யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை. தகவலறிந்த தாண்டிக்குடி போலீஸார் கே.சி.பட்டி சென்று மாலதி உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில் மாலதியை தற்கொலைக்கு தூண்டியதாக சதீஷ் மீது தாண்டிக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

SCROLL FOR NEXT