மதுரை அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுமாட்டுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரை ஆண்டார்கொட்டாரம் அருகிலுள்ள கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி லட்சுமியம்மாள். இவர் பசுமாடு ஒன்று வளர்க்கிறார்.
இன்று காலை அந்த மாடு கல் மேடு- சக்கிமங்கலம் ரோட்டிலுள்ள மாநகராட்சி புல் வளர்க்கும் பண்ணை பகுதிக்குச் சென்று, சாலையோரத்தில் புல் மேய்ந்தது. அப்போது, அந்த பசுமாட்டை ஒருவர் அரிவாளால் கழுத்தில் வெட்டி பெரிய காயத்தை ஏற்படுத்தி உள்ளார்.
ரத்தம் கொட்டிய நிலையில் வீட்டுக்குச் சென்ற பசுவைப் பார்த்து உரிமையாளர் லட்சுமியம்மாள் மனவேதனை அடைந்தார். காயமடைந்த பசுமாட்டுடன் அவர் மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார்.
பசுவை வெட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அவர் வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவமனையில் காயத்துக்கு சிகிச்சை அளித்து, வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இது தொடர்பாக கருப்பாயூரணி போலீஸார் விசாரிக்கின்றனர்.
மேலும், போலீஸார் கூறுகையில், ‘‘பசுமாடு மேய்ந்த இடம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமானது என்றாலும், பசுவை வெட்டிய நபர் யார் என, உரிமையாளர் தெரிவிக்கிறார். அதன் படி, அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.