மதுரையில் 25-க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்கில் தொடர் புடைய கும்பலை போலீஸார் கைது செய்து, நகை மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
ஊரடங்கால் ஏப்ரல், மே மாதம் தவிர, ஜூன் மாதம் முதல் மதுரை நகரில் வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க துவங்கின.
குறிப்பாக அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி, கடைக்கும் செல்லும் நபர்களை குறி வைத்து செல்போன், நகை மற்றும் ஏடிஎம்களுக்கு செல்லும் நபர்களிடம் வழிப்பறியில் கும்பல் ஒன்று செயல்படுவது காவல் ஆணையர் பிரேமானந்த் சின்காவின் கவனத்துக்கு வந்தது.
அவரது உத்தரவின்படி, நகர் குற்றப்பிரிவு துணை ஆணையர் பழனிக்குமார் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையில் தனிப்படை ஒன்று தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டது.
இது தொடர்பாக ஒத்தக்கண் பாண்டியராஜன், பெண் வழக்கறிஞர் கோட்டைஈஸ்வரி, அவரது கணவர் ஸ்டீபன் வர்க்கீஸ் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 15 பவுன், 10 செல்போன்கள், 2 ஆடு, 2 பைக் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து துணை ஆணையர்கள் பழனிக்குமார், சிவபிரசாத் செய்தியாளர்களிடம் கூறியது:
ஒத்தக்கண் பாண்டி யராஜன் என்பவர் தலைமையில் இயங்கிய 6 பேர் கொண்டு கும்பலில் 5 பேரை கைது செய்தோம். இக்கும்பலுக்கு மதுரை கண்ணனேந்தல் பெண் வழக்கறிஞர் கோட்டை ஈஸ்வரி, அவரது கணவர் அரசு பஸ் ஓட்டுநர் ஸ்டீபர் வர்க்கீஸ் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.மேலும், வழக்குகளை பார்ப்பதுடன்.
வழிப்பறி நகைகளை விற்றுக் கொடுத்தும் உதவியது தெரிந்தது. பாண்டியராஜன் மீது அவனியாபுரம், பெருங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த வழிப்பறியில் தொடர்பு உள்ளது.
இவர் மீது தற்போது வரை 32 குற்ற வழக்குகள் உள்ளன. இவரது கூட்டாளிகள் அப்பாஸ், குண்டு காளிமுத்து ஆகியோரும் சிக்கினர்.
அப்பாஸ் மீது 17 வழக்குகள் உள்ளன. இவர்கள் தொடர்ந்து செயின், செல்போன் பறிப்புகளில் ஈடுபட்டு, பயத்தை ஏற்படுத்த கை, தலையில் வெட்டி காயத்தை ஏற்படுத்தி வந்துள்ளனர்.
வைக்கம் பெரியார் நகரில் வீட்டு ஒன்றை வாடகை பிடித்து, பகல் நேரத்தில் அங்கு தங்கியிருந்து இரவில் காட்டுப்பகுதியில் பதுங்கி அதிகாலையில் வழிப்பறிகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இக்கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட டூல்ஸ் பாண்டி, மேலும் இரு சிறுவர்களை தேடுகிறோம்.
குட்கா, கஞ்சா தடுக்க தனிப்படை ஒன்று செயல்படுகிறது. போலீஸ் போன்று ஏமாற்றி மூதாட்டி களிடம் நகை பறித்த 4 வழக்கில் 2 கண்டுபிடித்துள்ளோம். பழிப்பழி கொலைகளைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகாலையில் குற்றச் செயல் அதிகரிப்பால் உட்கோட்டம் வாரியாக தலா 2 தனிப்படை போலீஸார் அதிகாலை 4 முதல் 7, மாலை 5 முதல் 9 வரை சிறப்பு ரோந்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தனிப்படையினரை காவல் ஆணையர் பாராட்டி, வெகுமதி வழங்கப்பட்டது.