வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே துவரை தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
இது குறித்து காவல் துறையினர் இன்று (ஆக.24) கூறியதாவது:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிழக்கு வட்டம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் மாவட்ட போதை தடுப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்செல்வம் தலைமையிலான காவல்துறையினர், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் கிழக்கு வட்டம் பகுதியில் கடந்த 5 நாட்களாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயி பூபதி (65) என்பவர் தனக்கு சொந்தமான ஏழு சென்ட் நிலத்தில் துவரம் பயிர் தோட்டத்தில் நடுவில் ஊடுபயிராக கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 40 கஞ்சா செடிகளை காவல்துறையினர் பிடிங்கி அங்கேயே தீயிட்டுக் கொளுத்தி அழித்தனர்.
பின்னர், விவசாய நிலத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த விவசாயி பூபதியை ஆலங்காயம் காவல்துறையினர் இன்று (ஆக.24) கைது செய்து, போதை தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போதை தடுப்புப் பிரிவு காவல்துறையினர் பூபதியிடம், பயிரிடப்பட்ட கஞ்சா எங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, அதற்கு பின்னால் இருப்பவர்கள் யார் என அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.