சுலைமான் 
க்ரைம்

ஆர்.கே.பேட்டையில் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட குழந்தை சில மணி நேரத்தில் பத்திரமாக மீட்பு: கடத்தலில் ஈடுபட்ட உறவினர் கைது

செய்திப்பிரிவு

ஆர்.கே.பேட்டையில் ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட குழந்தையை சில மணிநேரத்தில் மீட்ட போலீஸார், இது தொடர்பாக குழந்தையின் உறவினரை கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம்ஆர்.கே.பேட்டை, இஸ்லாம் நகரைச் சேர்ந்தவர் பாபுஎன்கிற முபாரக்(34). இவர்,ஆர்.கே.பேட்டை அருகே ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட சோளிங்கரில் கறிக்கோழி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சோபியா. முபாரக்- சோபியா தம்பதிக்கு பர்வேஸ்(9), ரிஷ்வந்த்(6), அசாருதீன்(3) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

இவர்களில், அசாருதீன் நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் மாயமான அசாருதீனை, பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

போலீஸார் விசாரணை

சிறிது நேரத்தில் முபாரக்கின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், ‘‘குழந்தை அசாருதீனைகடத்திவிட்டேன். ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய் அளித்தால் குழந்தையை திரும்ப ஒப்படைப்பேன். பணம் கொடுக்கவில்லையென்றால், கொலை செய்துவிடுவேன்’’ என, மிரட்டல் விடுத்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த முபாரக் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்.கே.பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, திருத்தணி டிஎஸ்பி குணசேகரன் தலைமையிலான போலீஸார், மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸார் குழந்தையை தேடுவதை அறிந்த மர்ம நபர், ஆர்.கே. பேட்டை அருகே வங்கனூர் கூட்டுச் சாலையில் குழந்தையை விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.

குழந்தை தனியாக அழுதுகொண்டிருப்பதை பார்த்த,அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.உடனே, சம்பவ இடம் விரைந்தபோலீஸார், குழந்தையை மீட்டு விசாரித்த போது,அக்குழந்தை கடத்தப்பட்ட அசாருதீன் என்பது தெரியவந்தது. குழந்தையை பெற்றோரிடம் போலீஸார் பத்திரமாக ஒப்படைத்தனர்.

கடனை அடைக்க...

இது தொடர்பாக, குழந்தையின் உறவினரான, ஆர்.கே.பேட்டை, இஸ்லாம் நகரைச் சேர்ந்த சுலைமான்(30) என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். கைது செய்யப்பட்ட சுலைமானிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், கறிக்கோழி விற்பனை தொழிலில் ஈடுபட்டு வரும் சுலைமானுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கடனை அடைக்க, குழந்தையை கடத்தி பணம் பறிக்க முயன்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT