கடலூரில் கே.என்.பேட்டையில் தடை செய்யப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்பிலான 8 டன் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் குட்கா, போதைப்பாக்கு போன்ற பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இப்பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும் தொடர்கிறது. இந்நிலையில், கடலூர் கே.என்.பேட்டையை ஒட்டிய திருப்பதி நகரில் உள்ள ஒரு வீட்டில் ஏராளமான குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் கடலூர் துணை கண்காணிப்பாளர் க.சாந்தி தலைமையிலான போலீஸார் இன்று (ஆக.14) கடலூர் அருகிலுள்ள கே.என்.பேட்டை திருப்பதி நகரில் பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளேச் சென்று பார்த்தபோது, பெட்டிப்பெட்டியாகவும், மூட்டைகளாகவும் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தகவலறிந்த காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர் அங்கிருந்த புகையிலை பொருட்களை கைப்பற்றியபோது, 7 வகையான போதைப் பொருட்கள் 7.75 டன் அளவுக்கு இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி என உணவுப் பாதுகாப்புத் துறையினர் மதிப்பிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக திருப்பாதிரிபுலியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராம.சுகந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஏழுமலை, சந்திரசேகரன் உள்ளிட்டோரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுதொடர்பாக தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
முதற்கட்ட விசாரணையில் பண்ருட்டி கணிசப்பாக்கத்தைச் சேர்ந்த பாரதி என்பவர், இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து, கடலூர் திருப்பாதிரிபுலியூரில் மளிகைக்கடை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. இவர் மீது ஏற்கெனவே புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீஸார் சோதனை நடத்துவதை அறிந்த பாரதி தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.