கைது செய்யப்பட்ட சேதுராமன் 
க்ரைம்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் கல்வித்துறை இயக்குநர் கொலை வழக்கில் மகன் கைது

ந. சரவணன்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் கல்வித்துறை இயக்குநர் கொலை வழக்கில் அவரது மகனை காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட பேராம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (82). அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜேஸ்வரி (75). இவர்களுக்கு, கபாலீஸ்வரன் (48), சேதுராமன் (45), தட்சிணாமூர்த்தி (40) என 3 மகன்களும், கலைவாணி (50), பாமாதேவி (43) என 2 மகள்களும் உள்ளனர். இதில், சேதுராமனை தவிர மற்ற அனைவரும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

பாலகிருஷ்ணனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் திருப்பத்தூர், பேராம்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருப்பதாக கூறப்படுகிறது. பாலகிருஷ்ணனின் மனைவி ராஜேஸ்வரி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டதால், அவர் தனியாக வசித்து வந்தார்.

2-வது மகன் சேதுராமன், தந்தையின் வீட்டில் இருந்து 2 தெரு தள்ளி தனி வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று (ஆக.5) மாலை பாலகிருஷ்ணன் அவரது வீட்டில் மர்மமான முறையில் உடலில் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது.

இது குறித்து வந்த தகவலின் பேரில், திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார், டிஎஸ்பி தங்கவேலு, தாலுகா ஆய்வாளர் மதனலோகன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சேதுராமனை அழைத்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக அளித்த பதில் காவல்துறையினரின் சந்தேகத்தை உறுதி செய்தது.

இதையடுத்து, சேதுராமனை காவல் நிலையம் அழைத்துச்சென்ற போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், சொத்துக்காக தந்தையை சரமாரியாக வெட்டிவிட்டு காவல்துறையினர் பிடியில் இருந்து தப்பிக்க மிளகாய் பொடியை வீடு முழுவதும் தூவிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இன்று (ஆக.6) சேதுராமன் கைது செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT