க்ரைம்

மதுரை நூற்பாலையில் பயங்கர தீ: 5 மணி நேரம் போராடி அணைத்த வீரர்கள்  

என்.சன்னாசி

மதுரையில் மூடிக்கிடந்த நூற்பாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி நெருப்பை கட்டுப்படுத்தினர்.

அருகில் குடியிருப்புப் பகுதி இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீ பரவுவதைத் தடுத்தனர்.

மதுரை விளாங்குடி அருகே தனியார் நூற்பாலை (டெக்ஸ்டைல்) செயல்படுகிறது.

நிர்வாக சிக்கல் காரணமாக கடந்த மூன்றாண்டாக இந்த நூற்பாலை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு சுமார் 9 மணிக்கு மேல் திடீரென மில் பகுதியில் இருந்து புகை மூட்டம் வெளியேறியது.

நூற்பாலை தீ பிடித்து எரிவதை அக்கம், பக்கத்து மக்கள் பார்த்தனர். அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

நிலைய அலுவலர் சுப்ரமணியன் உள்ளிட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டாலும், தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அணைக்க முடியவில்லை.

மேலும், பெரியார் பேருந்து நிலைய தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மேலும், 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மாநகராட்சிக்கு சொந்தமான 3 லாரிகள் மூலமும் தண்ணீர் கொண்டு வரப்பட்டன.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாணசுந்தரம் மேற்பார்வையில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரவு 2 மணி வரை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும், டெக்ஸ்டைல் மில்லுக்கு சொந்தமான பேக்கிங் இயந்திரங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகள், வர்த்தக நிறுவனங்கள் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டன.

ஆலையில் ஏற்கெனவே மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், நூற்பாலையில் தீவிபத்து ஏற்பட்டு இருப்பது சதிவேலை காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் கூடல்புதூர் போலீஸார் விசாரின்றனர்.

SCROLL FOR NEXT