சிலம்பரசன் 
க்ரைம்

மருந்து கடைக்காரருக்கு மிரட்டல் விடுத்து  ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்ட ரவுடி கைது 

செய்திப்பிரிவு

கூடுவாஞ்சேரி அருகே மருந்து கடை உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை, 48 மணி நேரத்தில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் மருந்துக் கடை நடத்தி வருபவர் வினோத். இவரிடம் இதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற ரவுடி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாமூல் கேட்டு மிரட்டிய ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.

இதுதொடர்பாக ஓட்டேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிலம்பரசனை போலீஸார் தேடிவந்தனர். பொழிச்சலூர் பகுதியில் இரும்பு வியாபாரியை மாமூல்கேட்டு மிரட்டிய புகாரில் சங்கர் நகர் போலீஸாரால் கைதாகி குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறைசென்ற சிலம்பரசன், கடந்த 22-ம் தேதிதான் வெளியே வந்துள்ளார். வந்தவுடன் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் சிலம்பரசன், தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு தப்பிச்செல்ல முயன்றபோது போலீஸார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிலம்பரசன் மீது ஏற்கெனவே 9 வழக்குகள் உள்ளன. டிஎஸ்பி அறிவிப்பு இதுகுறித்து கூடுவாஞ்சேரி டிஎஸ்பி ரவிச்சந்திரன் கூறியதாவது:

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ரவுடிகள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வியாபாரிகளும், பொதுமக்களும் ரவுடிகள் இடையூறு செய்தால் உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.தகவல் தெரிவிப்போர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT