மதுரையில் கரோனா ஊரடங்கால் முதல் 2 மாதம் குறைந்து இருந்த கொலை, கொலை முயற்சி குற்றச் செயல்கள் தற்போது அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மதுரை நகரில் குற்றச்செயல்களைத் தடுக்க காவல் நிலைய போலீஸார் தவிர தனிப்படைகளும் செயல்படுகின்றன. ரவுடிகள், கொலைக் குற்றவாளிகளை கண்காணிக்கும் தனிப்படை ஒன்று நீதிமன்றங்களில் வாய்தாவுக்கு ஆஜராகும் பழைய குற்றவாளிகளைக் கண்காணிக்கின்றனர்.
ஏற்கெனவே நகரில் யாகப்பாநகர், காமராசர்புரம், அவனியாபுரம் பகுதியில் நீண்ட நாட்களாகவே முன் பகையால் தொடரும் பழிப்பழி கொலைகளைத் தடுக்கவும், செல்லூர், ஜெய்ஹிந்த்புரம் போன்ற இடங்களில் ரவுடிகள், பழைய குற்றவாளிகள் நடமாட்டத்தையும் போலீஸார் கண்காணிக்கின்றனர்.
இந்நிலையில் கரோனா ஊரடங்கால் முதல் 2 மாதம் குறைந்து இருந்த கொலை, கொலை முயற்சி குற்றச் செயல்கள் தற்போது அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கடந்த 15-ம் தேதி செல்லூர் போஸ் வீதியில் முன்விரோதத்தால் வீட்டில் தூங்கிய ராஜ்கிரன் கொலை செய்யப்பட்டார். 16-ம் தேதி எஸ்.எஸ்.காலனி நேரு நகரில் தனியாக இருந்து பஞ்சவர்ணம் நகை, பணத்துக்காக கொலை செய்யப்பட்டார்.
17-ம் தேதி சிக்கந்தர் சாவடியில் முன்விரோதம் காரணமாக பைக்கில் சென்ற விக்னேஷ் கொல்லப்பட்டார். 21-ம் தேதி மேல அனுப்பானடி பகுதியில் பழிக்குபழியாக முத்துக்குமார் கொலை செய்யப்பட்டார்.
26-ல் எல்லீஸ்நகர் போடிலைன் பகுதியில் ரவுடி பட்டியலில் இருந்த வெள்ளிக்கண்ணு செந்தில், அவரது சகோதரர் முருகனும் கொல்லப்பட்டனர்.
அதே நாளில் சிலைமான் பகுதியில் ரவுடி தவமணி என்பவர் கொலை செய்யப்பட்டார். ஜூலை முதல் வாரத்தில் அலங்காநல்லூர் அருகே போலீஸ் ‘ இன்பார்மர் ’ ஒருவரை வெட்டிக் கொலை செய்தனர்.
இப்படி ஒரே மாதத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரவுடிகளுக்குள் இருக்கும் முன்விரோதம் காரணமாக தனிப்பட்ட முறையில் கொல்லப்பட்டாலும், அடுத்தடுத்த கொலைகள் பொதுமக்களை அச்சமடையச் செய்கிறது.
இதற்கிடையில், காமராசர்புரம் பகுதியில் பழிக்குபழி சம்பவம் மீண்டும் தலைதூக்கி இருக்கிறது. முன்னாள் திமுக மண்டலத் தலைவர் குருசாமியை குறிவைத்து, தாக்க எதிர்கோஷ்டியினர் தொடர்ந்து திட்டமிடுகின்றனர்.
இதன் வெளிப்பாடு கடந்த இரண்டு நாளுக்கு முன்பு அவரது வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு இருக்கின்றன. மதுரை நகர், மாவட்டத்திலும் கரோனா காலத்தில் கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இவற்றை முன்கூட்டியே தடுக்க, புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா, காவல் கண்காணிப்பாளர் சுஜி த்குமார் ஆகியோர் ரவுடிகளை, பழைய குற்றவாளிகளை அடக்கி ஒடுக்கவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மதுரை நகர் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆணையர் உத்தரவுபடி, குற்றச் செயல்களை தடுக்கவும், ரவுடிகளை ஒழிக்கவும் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர் குற்றம் புரிவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹோமிங் ஆப்ரேஷன் மூலம் பழைய குற்றவாளிகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டுள்ளது" என்றனர். புறநகர்ப் பகுதியிலும் கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களைத் தடுக்க, போலீஸாருக்கு எஸ்.பி அறிவுறுத்தியுள்ளார்.