மதுரையில் திமுக பிரமுகர் வி.கே.குருசாமி வீட்டில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் வீட்டின் கண்ணாடி கதவு சேதமடைந்தது.
ஆனால், வீட்டிலிருந்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக கீரைத்துரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை கிழக்கு திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி. இவர் திமுக பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவருக்கும் இவரது உறவினரும் அதிமுக முன்னாள் மண்டலத் தலைவருமான ராஜபாண்டிக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் நீடிக்கிறது. இருதரப்பிலும் 12 பேருக்கும் மேற்பட்டோ கோஷ்டி மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
வழக்கு ஒன்றில் சிக்கி ஜாமீனில் உள்ள குருசாமியும் அவரது மகனும் வெளியூரிலேயே தங்கி வழக்கை சந்திப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுரை காமராஜர்புரம் பகுதியில் உள்ள வி.கே.குருசாமி வீட்டில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றனர்.
இதில், வீட்டின் கண்ணாடி கதவு சேதமடைந்தது. ஆனால், வீட்டிலிருந்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக கீரைத்துரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினரும் விசாரணை மேற்கொண்டனர்.
வி.கே.குருசாமி வீட்டின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் 4 பேரைத் தேடி வருகின்றனர். மேலும், அந்தத் தெருவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனங்கள் என 6 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அதே கும்பல் தான் இந்த வேலையிலும் ஈடுப்பட்டதா என்று விசாரிக்கின்றனர்.
முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்ட தாக்குதல் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நகர்கிறது. ஏற்கெனவே, 4 ஆண்டுகளுக்கு முன் இதேபோல் வி.கே.குருசாமி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.