சென்னை அமைந்தகரையில் கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் விளையாட்டு மோகத்தில் மூழ்கி, பணத்தை இழந்ததால் மனம் உடைந்து பெற்றோருக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை டி.பி.சத்திரம், கே.வி.என் 2-வது தெருவில் வசித்தவர் நிதிஷ் குமார் (20). சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் டாட்டூ போடுவதில் திறமையானவர்.
கரோனா தொற்று காரணமாக மார்ச் 25-ம் தேதி முதல் கல்லூரி மூடப்பட்டதால் பொழுதுபோக்கிற்காகவும், வருமானம் பார்க்கவும் ஷெனாய் நகரில் உள்ள சேகர் என்பவருக்குச் சொந்தமான டாட்டூ போடும் கடையில் சேர்ந்தார். டாட்டூ போடும் தொழில் மூலம் தொடர்ந்து வருமானம் பார்த்து வந்துள்ளார்.
நேற்று ஊரடங்கு காரணமாக டாட்டூ கடையிலேயே நிதிஷ் குமார் தங்கியுள்ளார். இன்று நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. போன் செய்தபோது ரிங் ஆகியும் போனை எடுக்கவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை ஜெகந்நாதன் டாட்டூ கடை உரிமையாளர் சேகருக்கு போன் செய்து கேட்டுள்ளார்.
அவர், டாட்டூ கடையில் நிதிஷ் குமார் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், அங்கு போனபோது கடை பூட்டப்பட்டிருந்தது. கடைக்கு வெளியே நிதிஷ் குமார் வாகனம் இருந்ததால், கடை உரிமையாளர் சேகர் மற்றொரு சாவியால் கடையைத் திறந்தபோது அங்கு கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கடையின் உள்ளே தூக்கிட்ட நிலையில் நிதிஷ் குமார் பிணமாகத் தொங்கியுள்ளார். இதுகுறித்து அமைந்தகரை போலீஸாருக்குத் தகவல் கொடுத்ததன் பேரில் அங்கு வந்த போலீஸார் நிதிஷ் குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணத்தை நிதிஷ் குமார் கடிதமாக எழுதியுள்ளார். அதில், ''என்னுடைய மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை. முழுக்க முழுக்க நான்தான் காரணம். நான் ஆன்லைனில் சூதாட்டத்தை விளையாடி எனது சேமிப்பு முழுவதையும் இழந்துவிட்டேன். விட்ட பணத்தைப் பிடிக்க வேண்டும் என்கிற வெறியில் டாட்டூ கடையில் இருந்த பணம் ரூ.20 ஆயிரத்தை வைத்து விளையாடி அதிலும் தோல்வி அடைந்து இருந்த பணத்தையும் இழந்துவிட்டேன்.
பணம் போன விரக்தியிலும், கடை உரிமையாளர் சேகர் அண்ணனின் பணத்தை வைத்து விளையாடி அதிலும் தோற்றதால் ஏற்பட்ட அவமானத்தாலும் மன அழுத்தத்துடன் இந்த முடிவை எடுக்கிறேன். இந்த முடிவு தவறான ஒன்றுதான். ஆனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை'' என நிதிஷ் குமார் எழுதி வைத்துள்ளார்.
கடை உரிமையாளர் சேகர் அண்ணன் தன்னை மன்னிக்கும்படி கேட்டுள்ள நிதிஷ், தனது பெற்றோரை ரொம்பப் பிடிக்கும், இந்த முடிவை எடுத்ததற்கு தன்னை மன்னிக்கும்படி கேட்டுள்ளார்.
20 வயதில் மூன்றாமாண்டு கல்லூரி பயின்று வந்த, கைத்தொழில் வைத்திருந்த இளைஞர், ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டது அவரது நண்பர்கள், உறவினர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யவேண்டும், பப்ஜி கேமைத் தடை செய்யவேண்டும் என கோரிக்கையும், வழக்கும் உச்ச நீதிமன்றம் வரை இருந்தும் தடையில்லாமல் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் கரோனா காலத்திலும் மக்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்சப் பணத்தை சுரண்டி அவர்களைக் கடன்காரர்களாக்குவதுதான் நடக்கிறது. இளைஞர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.