சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதி ரேஷன் அரிசி கடத்தலின் மையமாக மாறியுள்ளது. கடத்தப்படும் அரிசி கோழிதீவனமாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது.
காரைக்குடி வட்டத்தில் 100 முழு நேரக் கடைகள், 29 பகுதிநேர கடைகள் செயல்படுகின்றன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுகள் உள்ளன.
ஒரு குடும்பத்திற்கு 12 முதல் 20 கிலோ வரை இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. தற்போது கரோனா ஊரடங்கால் பிரதமர் சிறப்பு திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்ப கூடுதலாக அரிசி வழங்கப்படுகிறது.
குடும்பத்திற்கு 12 முதல் 40 கிலோ வரை அரிசி வழங்கப்படுகிறது. ஆனால் குறித்த அளவுப்படி அரிசியை அட்டைதாரர்களுக்கு வழங்காமல் சிலர் கடத்தி வருகின்றனர்.
குறிப்பாக செஞ்சை, கழனிவாசல், வாட்டர்டேங் உள்ளிட்ட பகுதிகளில் கடத்தல் அதிகளவில் நடக்கின்றன. அவற்றை சில ஆலைகள் குறைந்த விலைக்கு வாங்கி, பட்டை தீட்டி பாக்கெட் மாவாக விற்பனை செய்கின்றன.
மேலும் அரிசியை குருனை வடிவில் மாற்றி கோழித்தீவினமாக நாமக்கல் பகுதியில் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9,420 கிலோவை பதுக்கி வைத்திருந்த கல்லல் செட்டியூரணியைச் சேர்ந்த சரவணன் (48) மற்றும் அவருக்கு உதவியாக இருந்த காரைக்குடியைச் சேர்ந்த முருகவேல் (50), வேப்பங்குளம் ரேஷன்கடை ஊழியர் தர்மராஜன் (38) ஆகியோரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல் கடந்த வாரம் காரைக்குடி பகுதியில் ஆயிரம் கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தல் மையமாக காரைக்குடி மாறியுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸாரோ பெயருக்கு ஒருசில இடங்களில் மட்டும் ஆய்வு நடத்துவதால் அரிசி கடத்தல் குறைந்தபாடில்லை. அரிசி கடத்தலை கட்டுப்படுத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து உணவு வழங்கல் பறக்கும்படை வட்டாட்சியர் தமிழரசன் கூறுகையில், ‘‘ பறக்கும்படை மூலம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம்,’’ என்று கூறினார்.