சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தங்கக்கட்டியை பாதி விலைக்கு விற்பதாகக் கூறி ரூ.3 கோடி மற்றும் 500 பவுன் தங்க நகைகளை மோசடி செய்த கணவர், மனைவி மீது பாதிக்கப்பட்டோர் போலீஸாரில் புகார் தெரிவித்தனர்.
காரைக்குடி அருகே பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த கணவர், மனைவி இருவரும் தங்களிடம் 7 கிலோ தங்கக் கட்டி உள்ளதாகவும், மேலும் அதை பாதி விலைக்கு விற்பதாகவும் ஆசை வார்த்தை கூறி வந்துள்ளனர்.
இதை நம்பி காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், அவர்களிடம் ரூ.3 கோடி ரூபாய் மற்றும் தங்களிடம் இருந்த 500 பவுன் தங்க நகைகளை கொடுத்துள்ளனர்.
மேலும் அதற்கு ஈடாக கணவர், மனைவி இருவரும் தாங்கள் கையெழுத்திட்ட காசோலை, பத்திரங்களை கொடுத்துள்ளனர். சில மாதங்கள் கழித்து அவர்களது மோசடி குறித்து பெண்களுக்கு தெரியவந்தது.
அவர்களிடம் பணத்தை கேட்டபோது இருவரும் தலைமறைவாகினர். இதையடுத்து மோசடி செய்த கணவர், மனைவி குறித்து தேன்மொழி என்ற பெண் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
வழக்கு பதிந்தும் நடவடிக்கை இல்லாதநிலையில் நேற்று பாதிக்கப்பட்ட பெண்கள் காரைக்குடி டிஎஸ்பி அருணிடம் புகார் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து டிஎஸ்பி அருண் கூறுகையில், ‘ மோசடி தொகை அதிகமாக இருப்பதால் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு மூலம் விசாரிக்கப்படும்,’ என்று கூறினார்.