பல கோடி ரூபாய் தனியார் நிதி நிறுவன மோசடியில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் 3 பேரை விசாரணைக்கு ஆஜராகுமாறு ராமநாதபுரம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த நீதிமணி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆனந்த் ஆகியோரை ராமநாதபுரம் பஜார் போலீஸார் கடந்த ஜூன் 10-ம் தேதி கைது செய்தனர்.
ஆசிரியர் ஆனந்த், நீதிமணியுடன் இணைந்து நடத்திய நிதி நிறுவனத்தில், ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ. 5,000 வட்டியும், முதலீடு திரட்டித்தரும் ஏஜெண்டுக்கு ரூ. 4,000- மும் கொடுத்துள்ளனர்.
இதை நம்பிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஏராளமான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஏஜெண்டாக செயல்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு திரட்டி, இந்நிறுவனத்தில் செலுத்தியுள்ளனர்.
இதில் ஏராளமான ஆசிரியர்களும் பணம் செலுத்தி ஏமாந்ததாக புகார் கூறப்பட்டு வருகிறது.
முதலீடு செய்த பணத்துக்கு வட்டியும் தராமல், முதலீடையும் திருப்பித்தராமல் ரூ. 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, ராமநாதபுரத்தைச் சேர்ந்த துளசிமணிகண்டன் என்பவரின் புகார் அடிப்படையிலேயே இருவரையும் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். போலீஸார் நீதிமணி, ஆசிரியர் ஆனந்த் ஆகியோரை தனித்தனியாக 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.
இவ்விசாரணையில் இருவரும் ரூ. 145 கோடி வரை நிதி திரட்டியதாகவும், இதில் 95 கோடி வரை முதலீட்டாளர்களுக்கு செலுத்திவிட்டதாகவும், மீதி ரூ.50 கோடி பாக்கியுள்ளதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இருவரும் ரூ. 500 கோடி வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆசிரியர் ஆனந்தின் முக்கிய ஏஜெண்டாக செயல்பட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆரோக்கிய ராஜ்குமாரை, போலீஸார் என்ற பெயரில் சிலர் கடந்த சில நாட்களுக்கு நள்ளிரவில் கடத்திச் சென்றனர். இதுதொடர்பாக கேணிக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமணி மற்றும் ஆனந்த் ஆகியோரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் பஜார் போலீஸார் திரைப்படத் தயாரிப்பாளர்களான சேலத்தைச் சேர்ந்த சிவா, சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையைச் சேர்ந்த ஞானவேல்ராஜா, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த முருகானந்தம் ஆகியோரை வரும் 20 முதல் 23-ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் (அழைப்பாணை) அனுப்பியுள்ளனர்.
மேலும் திரைப்படத் தயாரிப்பாளர் 3 பேரிடமும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நிதி நிறுவன மோசடியில் மேலும் பலர் சிக்க உள்ளனர் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.