க்ரைம்

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் கொலை: இளைஞர் வெறிச் செயல் 

செய்திப்பிரிவு

குன்றத்தூரில் 4 மாதமாக வாடகை தராததைக் கேட்ட வீட்டு உரிமையாளரை இளைஞர் ஓட ஓட விரட்டி, குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவல்லிக்கேணியில் வசித்தவர் குணசேகரன் (60). இவர் வங்கி ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். குணசேகரன் குன்றத்தூர், பண்டாரத் தெருவில் சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டி வாடகைக்குக் குடியமர்த்தியுள்ளார். அங்கு ஆரம்பத்தில் சரியாக வாடகை கொடுத்து வந்த வாடகைதாரர்களால் ஊரடங்கு காரணமாக வாடகை கொடுக்க முடியவில்லை. இதுபற்றி வீட்டு உரிமையாளர் பல முறை கேட்டும் வாடகை தரவில்லை.

இதையடுத்து நேற்றிரவு வீட்டு உரிமையாளர் குணசேகரன் வாடகைதாரர்களிடம் சற்று கடுமையுடன் வாடகை கேட்டதாகக் கூறப்படுகிறது. வாடகை தராவிட்டால் வீட்டைக் காலி செய்யச் சொல்லி எச்சரித்துவிட்டு குணசேகரன் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் வாடகைதாரரின் மகன் அஜித் (21) இரவு வீடு திரும்பினார். அவரிடம் வீட்டு உரிமையாளர் வாடகை கேட்டு சத்தம் போட்டுவிட்டுச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர். தான் இல்லாத நேரத்தில் பெற்றோருடன் சண்டை போடுவதா என்று கடுமையாக ஆத்திரமடைந்த அஜித், குணசேகரன் வீட்டுக்குச் சென்று அவரை வெளியில் அழைத்துள்ளார்.

வெளியில் வந்த குணசேகரனிடம் அஜித் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. கத்தியால் குத்த முயன்றபோது குணசேகரன் தெருவில் இறங்கி ஓடியுள்ளார். ஆனால் அவரை விடாமல் துரத்திச் சென்ற அஜித் அவரைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் விழுந்த குணசேகரன் அங்கேயே உயிரிழந்தார். இதுகுறித்துத் தகவலறிந்த குன்றத்தூர் போலீஸார் இறந்துபோன குணசேகரனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த அஜித்தைக் கைது செய்தனர்.

ஊரடங்கு காலத்தில் வீட்டு வாடகை கேட்கக்கூடாது என அரசு அறிவித்திருந்தாலும் நடைமுறையில் வாடகையை நம்பி வாழும் பல உரிமையாளர்கள் உள்ளனர். பல இடங்களில் வாடகைதாரர்கள் முதலில் வீட்டு வாடகையைக் கொடுத்துவிடுகின்றனர். ஆனாலும், வாடகை கொடுக்க இயலாதவர்களும் உள்ளனர்.

இந்நிலையில் வாடகைப் பிரச்சினையில் வீட்டு உரிமையாளரான முதியவர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT