மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கும், கடலூரைச் சேர்ந்த 27 வயது இளைஞருக்கும் மதுரை செல்லூர் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் வைத்து இன்று திருமணம் நடப்பதாக இருந்தது.
இது பற்றி செல்லூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் சிறுமியின் படிப்புச் சான்றிதழை ஆய்வு செய்தனர். அப்போது, அவருக்கு 17 வயது மட்டுமே ஆகி இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து இருதரப்பு பெற்றோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா உள்ளிட்டோரும் அங்கு சென்று விசாரித்தனர்.
இதற்கிடையில் 18 வயது பூர்த்தி அடையாமல் திருமணம் செய்யமாட்டோம் என, இரு தரப்பு பெற்றோர் மற்றும் அந்த இளைஞரிடம் கடிதம் எழுதி வாங்கப்பட்டு, அவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.
செல்லூர் பகுதியில் கடந்த 1 மாத்திற்குள் இது மூன்றாவது குழந்தை திருமண முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என, குழந்தைகள் நலக் குழுஉறுப்பினர் பாண்டிராஜா தெரிவித்தார்.