புகழபெற்ற நெல்லை ’இருட்டுக் கடை அல்வா’ உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை.செய்து கொண்டார்.
நெல்லை நகரின் மையமான நெல்லையப்பர் கோயிலை ஒட்டி உலகப்புகழ்பெற்ற இருட்டுக்கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்தக் கடையின் உரிமையாளர் ஹரிசிங்கின் மருமகனுக்கு அண்மையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து ஹரிசிங்குக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கட்ந்த 23-ம் தேதி ரத்த, சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவரும் பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை ஹரிசிங்குக்கும் கரோனா உறுதியானது. இதனையடுத்து அவர் கரோனா அச்சத்தால் மனமடைந்து அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட அவரின் உடல் அடக்கம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
நெல்லை டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
ஹரிசிங் வசித்து வந்த டவுன் அம்மன் சன்னதி தெருவில் தீவிர துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெல்லை இருட்டுக் கடை, 1940-களில் ராஜஸ்தானைச் சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் தொடங்கப்பட்டு இப்போது அவருடைய மூன்றாம் தலைமுறை வாரிசுகளால் நடத்தப்படுகிறது.
நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் தற்கொலை அம்மாநகர மக்களுக்கு மட்டுமல்லாது பலருக்கும் கசப்பான செய்தியாகச் சேர்ந்துள்ளது.