க்ரைம்

காப்பீட்டுத் தொகைக்காக கொலை செய்யப் பணம் கொடுத்து கொலையான தொழிலதிபர்- டெல்லியில் அதிர்ச்சி

செய்திப்பிரிவு

தன் குடும்பத்துக்கு காப்பீட்டு தொகை கிடைப்பதற்காக தன்னையே ஆளை வைத்துக் கொலை செய்யச் சொல்லி கொலையாகியுள்ளார் தொழிலதிபர் ஒருவர்.

ரூ.60,000 கூலிப்படைக்குக் கொடுத்து தன்னையே கொல்லச்சொன்னது டெல்லி போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

37 வயதான கவுரவ் பன்சல் ஒரு தொழிலதிபர், இவருக்கு ஷானு என்ற மனைவியும் குழந்தைகளும் உண்டு, இவர்கள் ஆர்யா நகர் பகுதியில் வசித்து வந்தனர்.

இவர் கடந்த 9 ம் தேதி திடீரென காணாமல் போனார். ஆனால் அடுத்த நாள் கைகள் கட்டப்பட்ட நிலையில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

கொலை வழக்குப்பதிவு செய்த போலீஸார் சுராஜ், மனோஜ்குமார் யாதவ், சுமித் குமார் ஆகியோரைக் கைது செய்தனர்.

அவர்கள் தங்கள் வாக்குமூலத்தில் தெரிவித்த விஷயங்கள் போலீஸாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கவுரவ் பன்சால் காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சத்திற்கும் அதிகம். கடன் தொல்லையினால் அவதிப்பட்டு வந்த பன்சல் தன் காப்பீட்டு தொகை இருந்தால் குடும்பத்துக்கு உதவும் என்று நினைத்தார்.

இதனையடுத்து சிலரை தொடர்பு கொண்டு ரூ.60,000 தொகையை தன் உயிருக்கே விலை பேசியுள்ளார். அதன்படி அவர்களும் கொலை செய்து விட்டனர்.

காப்பீட்டு தொகைக்காக தன்னையே கொலை செய்து பலியான சம்பவம் அங்கு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

SCROLL FOR NEXT