திட்டக்குடி அருகே தாய் - மகன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி திவ்யா (26). இவர் இன்று (ஜூன் 13) அதே பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் துணி துவைப்பதற்காகச் சென்றுள்ளார். உடன் அவரது மகன் ஆரியனையும் (8) அழைத்துச் சென்றுள்ளார்.
திவ்யா துணி துவைத்துக் கொண்டிருக்கும்போது, குட்டையில் விளையாடிக் கொண்டிருந்த ஆரியன் திடீரென மூழ்கியுள்ளார். இதைப் பார்த்த திவ்யா, மகனைக் காப்பாற்ற முயன்று, குட்டையில் இறங்கியபோது, அவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதையடுத்து, தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ராமநத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.