விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடி டிக்-டாக் வெளியிட்ட கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையம் அருகே குடல்புரிநத்தம் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிக்குள் முயல் மற்றும் காட்டு பன்றிகளை நாய்கள் உதவியுடன் வேட்டையாடி சித்திரவதை செய்த வீடியோ டிக்டாக்-கில் வெளியானது.
இதனை அடிப்படையாகக் கொண்டு ராஜபாளையம் வனத்துறை சரக அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான வனத்துறையினர் குடல்புரிநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டும் விசாரணை நடத்தியும் வந்தனர்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சிவா என்பவர் குறிப்பிட்ட டிக்-டாக் வீடியோவை வெளியிட்டது தெரியவந்தது. அந்த வீடியோவில் காட்டுப் பன்றிகளை நாய்கள் தாக்குவதும், இரவு நேரத்தில் ஒளிவிளக்கு பயன்படுத்தி நாய்கள் மூலம் முயல்களை வேட்டையாடியது போன்று பதிவிட்டுள்ளதும் தெரியவந்தது.
அதையடுத்து, கல்லூரி மாணவர் சிவாவை வனத்துறையினர் கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.