செந்துறை அரசு மருத்துவமனை 
க்ரைம்

செந்துறை அருகே நீரில் மூழ்கி 2 குழந்தைகள் பலி; சோகத்தில் குடும்பத்தினர்

பெ.பாரதி

செந்துறை அருகே குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள பொன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் குமார் –ஐஸ்வர்யா. விவசாயக் கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு பிருந்தா (10), கிரிதரன் (8) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர். செந்துறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிருந்தா 4-ம் வகுப்பும், கிரிதரன் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று (ஜூன் 4) மாலை இருவரும் அவரது தாத்தா பஞ்சமுத்துவுடன் (60) மாடு மேய்க்கச் சென்றனர். அப்போது, அய்யனார் கோயில் அருகேயுள்ள குளத்தில் குழந்தைகள் இருவரும் குளித்துள்ளனர். இதில், குழந்தைகள் இருவரும் நீரில் மூழ்குவதைக் கண்ட அருகிலிருந்தவர்கள், இருவரையும் மீட்டு செந்துறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் குழந்தைகளைப் பரிசோதனை செய்ததில் இருவரும் இறந்துவிட்டனர் எனத் தெரியவந்தது.

இதனையடுத்து, குழந்தைகள் இருவரது உடல்களும் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தைகளின் இறப்பு குறித்து செந்துறை போலீஸார் விசாரிக்கின்றனர்.

குமார்-ஐஸ்வர்யா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அக்குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியிலும், அப்பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT