மதுரைக்குப் போய் மல்லி வாங்கி வந்தால் ஒன்றும் செய்யமாட்டார்கள். ஆனால், மல்லி மட்டுமல்லாமல் கஞ்சாவும் வாங்கி வந்தால்? அப்படியொரு கும்பலை வளைத்துப் பிடித்திருக்கிறது நாகை மாவட்ட போலீஸ்.
நாகையில் இன்று காலை வெளிப்பாளையம் போலீஸார் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையிலிருந்து நாகை வந்த ஒரு வேனை பப்ளிக் ஆபீஸ் சாலையில் நிறுத்திய போலீஸார், வழக்கம் போல் சோதனை செய்தனர். அதில் இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் இருந்தனர். மதுரையில் நடைபெற்ற தனது சின்னம்மா இல்லப் புதுமனை புகுவிழாவுக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வருவதாக அதில் இருந்த பெண்களில் ஒருவரான கலைச்செல்வி கூறினார்.
அதற்கான ஆவணங்களும் அவர்களிடம் இருந்தன. ஆனாலும் போலீஸாருக்கு ஏதோ பொறிதட்ட சோதனையைத் தீவிரப்படுத்தினார்கள். அதன் விளைவாக, வேன் இருக்கைகளுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த கட்டைப் பைகளை எடுத்து ஆராய்ந்தனர். அதன் மேல் பகுதியில் ரேஷன் அரிசி இருந்தது. வீட்டுக்கு வாங்கிச் செல்வதாக கூறியிருக்கின்றனர். ஆனாலும் விடாத போலீஸார், அந்த அரிசியைக் கொட்டிவிட்டுப் பார்த்தால் பையின் அடிப்பகுதியில் சிறிய பைகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதைத் திறந்து பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அது கஞ்சா பொட்டலம். மொத்தம் நாற்பது கிலோ இருந்தது.
சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான அந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸார் வேனை காவல் நிலையத்துக்கு ஓட்டிச் சென்றனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற உறவினர் இல்லப் புதுமனை புகுவிழாவுக்கு சென்று திரும்பும் வழியில் தலைக்கு வைத்துக் கொள்ள மதுரை மல்லியை வாங்கியவர்கள், அதோடு சேர்த்து விற்பனைக்குக் கஞ்சாவையும் வாங்கிக் கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து, கரோனா காலத்திலும் நூதன முறையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி, கலைச்செல்வி, விஜயா ஆகிய மூவரையும், பணம் கொடுத்து கஞ்சா வாங்கிவரச் சொன்ன ஆனந்த் என்பவரையும் கைது செய்தது போலீஸ்.
மேலும், இவர்கள் மதுரையில் யாரிடமிருந்து கஞ்சா வாங்கினார்கள், இந்தக் கடத்தல் கும்பலின் நிஜப் பின்னணி என்ன? என்பன உள்ளிட்ட விவரங்களை நாகை டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.