புதுச்சேரி அருகே தனியார் வங்கி ஊழியர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர் அருகே மாடாம்பூண்டி கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (22). இவர் அங்குள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். புதுச்சேரி அடுத்த திருபுவனை பாளையம் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷ்குமார் திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
ராஜேஷ்குமார் திருமணத்துக்குப் பிறகு திருபுவனை பாளையத்தில் மனைவியுடன் வசித்து வந்தார். திருக்கோவிலூரில் பணிபுரிந்து வந்ததால் வாரம் ஒருமுறை வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நேற்று (ஜூன் 3) மாலை காயத்ரியின் சகோதரர் செல்வராஜ், ராஜேஷ்குமாரை மது குடிக்க அழைத்துச் சென்றுள்ளார்.
அதன்பிறகு இரவு ராஜேஷ்குமார் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ராஜேஷ்குமார் திருபுவனை பாளையம் மல்லிகை நகர் பகுதியில் இன்று (ஜூன் 4) கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது அருகில் மது பாட்டில், காலணிகள் கிடந்தன. அவருடன் சென்ற செல்வராஜைக் காணவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருபுவனை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். சீனியர் எஸ்.பி. ராகுல் அல்வால், எஸ்.பி. ரங்கநாதன் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். பின்னர் போலீஸார் ராஜேஷ்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருபுவனை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராஜேஷ்குமாருடன் சென்ற செல்வராஜைத் தேடி வருகின்றனர்.
கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக புதுச்சேரியில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டன. மதுக்கடைகள் திறக்கப்பட்ட பிறகு அடிக்கடி மோதல்கள் அதிகரித்து வருகின்றன. கொலையும் நடக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கடந்த 3 நாட்களில் 3 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
நேற்று முன்தினம் நள்ளிரவு நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கத்தில் வடமாநிலத் தொழிலாளி பிரமோத்குமார் சிங் என்பவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அதுபோல் புதுச்சேரி நடேசன் நகர் பகுதியில் உருளையன்பேட்டையைச் சேர்ந்த அருள் என்பவர் நேற்று மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டார். தற்போது திருபுவனை பாளையம் பகுதியில் வங்கி ஊழியர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தத் தொடர் கொலைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.