புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே சிறுமி கொலை வழக்கில் மருளாளி உள்ளிட்ட 2 பெண்களை போலீஸார் இன்று கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் கே.பன்னீர் (41) - இந்திரா. இவர்களது 13 வயது மகள், கடந்த மே 18-ம் தேதி அங்குள்ள யூக்கலிப்டஸ் காட்டில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதையடுத்து அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி மறுநாள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாய் இந்திரா அளித்த புகாரின் பேரில் கந்தர்வக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சிறுமியை யார், எதற்காக கொலை செய்தார்கள் என்ற விவரம் உடனே தெரிய வராததால் இந்தச் சம்பவம் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.வி.அருண்சக்திகுமார் உத்தரவின்பேரில் 8 தனிப்படையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், திடீர் பணக்காரராக வர வேண்டும் என்பதற்காகவும், பிரச்சினைகள் தீர வேண்டும் என்பதற்காகவும் மகளைத் தந்தையே கொடூரமாகக் கொலை செய்தது அம்பலமாகியது.
இது தொடர்பாக பன்னீர், உறவினர் பி.குமார் (32) ஆகியோரை இரு தினங்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், இக்கொலைக்குத் தொடர்புடைய மருளாளி புதுக்கோட்டையைச் சேர்ந்த வசந்தி (50), மின்னாத்தூரைச் சேர்ந்த முருகாயியையும் (60) போலீஸார் இன்று (ஜூன் 4) கைது செய்தனர்.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.வி.அருண்சக்திகுமார் கூறும்போது, "பன்னீருக்கு இந்திரா, மூக்காயி ஆகிய 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 3 மகள்கள் (கொல்லப்பட்ட சிறுமி உட்பட), 1 மகன். 2-வது மனைவி மூக்காயிக்கு 2 மகள்கள் உள்ளனர். தனித்தனியே வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வழி தெரியாமல் புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண் மருளாளி சி.வசந்தியிடம் பன்னீர் சென்றுள்ளார். அப்போது, பூஜை செய்து மகள்களில் ஒருவரைப் பலி கொடுத்தால் பிரச்சினை தீரும் என அவர் கூறினாராம்.
இதையடுத்து, மே 17-ம் தேதி நொடியூரில் உள்ள ஒரு குளத்தில் நள்ளிரவில் பன்னீர், மூக்காயி, உறவினர் வடுதாவயலைச் சேர்ந்த பி.குமார்(32), வசந்தி, மின்னாத்தூரைச் சேர்ந்த எம்.முருகாயி ஆகியோர் பூசணிக்காய் வைத்து விடிய விடிய பூஜை செய்துள்ளனர்.
பின்னர், வசந்தி கூறிய ஆலோசனைப்படி மறுநாள் பாப்பாங்குளம் யூக்கலிப்டஸ் காட்டில் சிறுமியை பன்னீர், குமார், மூக்காயி ஆகியோர் சேர்ந்து கழுத்தை நெரித்துள்ளனர். சிறுமி உயிருக்குப் போராடியதைப் பார்த்து குமார், மூக்காயி ஆகியோர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர்.
சிறுமியை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, எதுவும் தெரியாதது போன்று பன்னீர் நாடகமாடி உள்ளார். இதைத்தொடர்ந்து பன்னீர், குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மூடநம்பிக்கை செயலில் ஈடுபட்ட வசந்தி, உடந்தையாக இருந்த முருகாயி ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
இந்நிலையில், மூக்காயி இரு தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், பன்னீருக்கு மேலும் பல பெண்களிடம் கூடா நட்பு இருந்ததும், சிலை கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட மனநலத் திட்ட அலுவலர் இரா.கார்த்திக் தெய்வநாயகம் கூறும்போது, "இதுபோன்ற மூட நம்பிக்கைகளை மக்கள் நம்பக்கூடாது. மாறாக, உழைப்பின் மீது நம்பிக்கை வைத்தால் மட்டுமே வாழ்வில் இலக்கை அடைய முடியும். மேலும், இதுபோன்ற மூடநம்பிக்கை குறித்து வீடுகளில் பேசுவதையே பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்" என்றார்.