பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

குமரி ராணுவ வீரரை அவதூறாகப் பேசிய எஸ்.ஐ. மீது துறைரீதியான நடவடிக்கை: மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ்

எல்.மோகன்

குமரி ராணுவ வீரரை அவதூறாக பேசிய எஸ்.ஐ. மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மனித உரிமை ஆணையமும் இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.க்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையைச் சேர்ந்த ராணுவ வீரர், குடும்பப் பிரச்சினை தொடர்பாக அருமனை காவல் நிலைய சார்பு ஆய்வாளரை செல்பேசியில் தொடர்புகொண்டு புகார் கூறினார்.

அப்போது, ராணுவவீரர் தனக்கு உத்தரவு போடுவதாக கூறி எஸ்.ஐ. அவதூறாக பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. ராணுவ வீரரையும், ராணுவப் பணியையும் அவதூறாக பேசும் வகையில் அந்த ஆடியோ இருந்ததால் இதற்கு ராணுவ வீரர்கள், மற்றும் பொதுநல ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

ராணுவ வீரரை அவதூறாகப் பேசிய ஆடியோவை கேட்டும், ஊடக செய்திகள் வாயிலாகவும் மாநில மனித உரிமை ஆணையம் இப்பிரச்சினையை விசாரைணக்கு எடுத்துள்ளது.

மனித உரிமை ஆணைய உறுப்பினரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சித்தரஞ்சன் மோகன்தாஸ் இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும் சம்பவத்ததின் உண்மை தன்மை குறித்து இரு வாரத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும். இல்லையெனில் மனித உரிமை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மக்கள் பணியில் சேவையாற்றும் எஸ்.ஐ. ஒருவரின் உரையாடல் கண்ணியமற்ற முறையில் அவதூறாக பேச்சுடன் இருந்ததால் அவர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. ஸ்ரீநாத் கூறியுள்ளார்.

இந்நிலையில் ராணுவ வீரரை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து குலசேகரம் காவல் நிலையம் முன்பு ஜீன் 1-ம் தேதி முதல் முன்னாள் ராணுவத்தினர் தொடர் போராட்டம் நடத்த போவதாகத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT