மதுரையில் எளிமையாக நடந்த மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவிட்ட 8 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கரோனா தடுப்பு ஊரடங்கால் இவ்வாண்டு நடைபெற வேண்டிய பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோயில் பட்டர்கள் மற்றும் மிக குறைந்த நபர்களை கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றி கடந்த 4-ம் தேதி நடந்தது. இந்நிகழ்வை ஆன் லைன் மூலம் பக்தர்கள் பார்க்க, கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது.
இந்நிலையில் மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை கொச்சைப் படுத்தும் வகையிலும், இந்து மதத்தை பின்பற்றுவோரை அவ மதிக்கும் நோக்கிலும் முகநூலில் சில எதிரான தகவல்களை ஒருசிலர் பதிவிட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக மதுரை யிலுள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு ஆன்லைன் மூலம் புகார்கள் குவிந்தன. மீனாட்சி கோயில் காவல் நிலையத்திற்கு ஈரோட்டைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் அனுப்பிய ஆன்லைன் புகாரின்பேரில், 6 பேர் மீது வழக்கு பதிவு, சைபர் கிரைம் போலீஸ் மூலம் விசாரிக்கின்றனர்.
இதே போன்று மதுரை எஸ்எஸ்.காலனி காவல் நிலையத்திலும் வழக்கறிஞர் சந்திரசேகர் கொடுத்த புகாரின்பேரில் ஆன்டோ லியோனி, கலீம் முகமது ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.