தமிழக எல்லையில் மது குடித்துக் கொண்டிருந்த மதுப் பிரியர்களை அடித்து விரட்டி மதுபாட்டில்களைப் பறித்துச் சென்றதாக புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மூன்று போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுவை மாநில எல்லைக்கு அருகேயுள்ள விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டு கிராமத்தில் நேற்று மாலை சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த போலீஸார் மணிகண்டன், கோகுல், பிரசன்னா, செல்வம் ஆகியோர் மது அருந்தியவர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களைப் பறித்துக் கொண்டு அவர்களை விரட்டி அடித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மதுப் பிரியர்கள் இத்தகவலை புதுச்சேரி போலீஸ் தலைமையகத்திற்குப் புகாராகக் கொண்டு சென்றனர். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், புதுச்சேரி காவலர்கள் 4 பேரும் அத்துமீறி நடந்திருப்பதும், மது பாட்டில்களைத் தங்களது சொந்தத் தேவைக்கு எடுத்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து 4 காவலர்களையும் பணி இடை நீக்கம் செய்து புதுச்சேரி சீனியர் காவல் கண்காணிப்பாளர் ராகுல் ஆல்வா உத்தரவிட்டார். அவர்கள் 4 பேர் மீதும் திருக்கனூர் போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் செல்வம், கோகுல், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மூவரும் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் மற்றொரு காவலர் பிரசன்னாவைப் போலீஸார் தேடி வருகின்றனர்.