க்ரைம்

ஜோதிமணி எம்.பிக்கு எதிராக பேசிய பாஜக நிர்வாகி: மதுரையில் காங்கிரஸ் நிர்வாகிகள் போலீஸில் புகார்

என்.சன்னாசி

கரூர் எம்.பி. ஜோதிமணியை அவதூறாகப் பேசிய பாஜக பிரமுகர் கரு.நாகராஜன் மீது மதுரை மாநகர் மாவட்ட காங்கி நிர்வாகிகள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

முன்னதாக, கரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பைச் சரிசெய்ய ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து தினமும் பல்வேறு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்தத் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன.

இதனிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அவர்களுடன் அமர்ந்து பேசி, வாகனம் ஏற்பாடு செய்தார் ராகுல் காந்தி. இது தொடர்பாக நிர்மலா சீதாராமனிடம் கருத்து கேட்டனர். அதற்கு "ஏன் அமர்ந்து பேசிக் கொண்டு.. அவர்களுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு நடந்து செல்லலாமே" என்று நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு உருவானது.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றை நடத்தியது. அதில் பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டார்கள். அதில் பாஜக சார்பில் மாநிலக் குழு செயலாளர் கரு. நாகராஜனும், காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் தொகுதி எம்.பி.ஜோதிமணியும் கலந்து கொண்டனர்.

அதில் கரு.நாகராஜன் பேசும்போது, எம்.பி. ஜோதிமணியை தரக்குறைவாக விமர்சித்தார். மேலும், அவருடைய பேச்சில் ஜோதிமணியை ஒருமையில் குறிப்பிட்டுப் பேசினார். இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, உடனடியாக விவாதத்திலிருந்து வெளியேறினார் எம்.பி. ஜோதிமணி.

இந்நிலையில், மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சையதுபாபு உள்ளிட்ட நிர்வாகிகள் அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் லில்லி கிரேஸிடம் பாஜக நிர்வாகி கரு. நாகராஜனுக்கு எதிராக கொடுத்த புகார்:

கடந்த 18-ம் தேதி தனியார் டிவி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணியுடன் பாஜகவின் மாநில நிர்வாகி கரு. நாகராஜன் என்பவரும் பங்கேற்றனர்.

அப்போது, ஜோதிமணியின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய நாகராஜன், ‘ நீ கேவலமான பெண் தானே ’ என்பதோடு மேலும், சில தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசினார்.

இதை நிகழ்ச்சியின் நெறியாளரும் கண்டித்து, எம்பிக்கு எதிராகப் பேசிய வார்த்தைகளை திரும்ப பெற வலியுறுத்தினார்.

ஆனாலும், அவர் மறுத்துவிட்டார். ஜோதி மணிக்கு எதிராக பேசியது என்பதோடு, பெண்களுக்கு எதிராக உள்நோக்கத்தில் அவர் பேசி இருக்கிறார். கரு.நாகராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக விசாரிக்கப்படும் என, காவல் உதவி ஆணையர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT