மதுரை நகரில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் உணவகம், மொபைல் கடைகள் நடத்தும் 3 இளைஞர்கள் கல்லூரி, பள்ளி மாணவிகள் சிலரை தங்களது வலையில் சிக்க வைத்து, அவர்களை தவறாக வழி நடத்த முயன்றதாக சமூக வலைதளங்களில் கடந்த வாரம் தகவல் வைரலானது.
இது தொடர்பாக விசாரிக்க, காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து இதுவரை வெளிப்படையான புகார் எதுவும் வராமல் இருந்தாலும், காவல் துணை ஆணையர் கார்த்திக் தலைமையில் சைபர் கிரைம் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல், கடும் குற்றச்செயல் தடுப்பு பிரிவு ஆய்வாளர்கள் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், மதுரை நகர் காவல்துறை சார்பில், வெளி யிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், ‘‘ மதுரை நகரில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக 3 இளைஞர்கள் மீதான புகார் அடங்கிய பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இக்குற்றச்சாட்டு தொடர்பாக புகார் ஏதேனும் தெரிவிக்க, விரும்புவோர் காவல் துணை ஆணையர் (94981-29498), ஆய்வாளர்கள் ஹேமமாலா (83000-17920), ஸ்ரீநிவாசன் (97905-99332) இவர்களின் கைபேசியில் புகார் தெரிவிக்கலாம். புகார் ரகசியம் காக்கப்படும்,’’ என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என, சம்பந் தப்பட்ட கல்லூரி நிர்வாகமும் மாணவியர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ பாதிக்கப்பட்ட யாரும் இதுவரை புகார் கொடுக்கவில்லை. ஆனாலும், வாட்ஸ் ஆப் மூலம் குற்றச்சாட்டப்பட்ட இளைஞர்களின் செல்போன்களில் பேசிய நபர்கள் குறித்து பட்டியல் தயாரித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாட்ஸ்-ஆப் தகவல் உண்மை எனில் சம்பந்தப்பட்டோர் மீதும், பொய் எனில் அதை பரப்பிய நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்