க்ரைம்

காரைக்குடியில் விவசாயி அடித்துக் கொலை: தந்தை, மகன் கைது 

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே விவசாயியை அடித்து கொன்ற தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர்.

காரைக்குடி அருகே ஜெயங்கொண்டான் பாராவயலைச் சேர்ந்த தோட்டக் காவலாளி ராக்கப்பன் (50). அவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையாவிடம் (45, பல ஆண்டுக்கு முன்பு உள்நாட்டு பத்திரம் மூலம் மனையிடம் வாங்கியுள்ளார்.

ஆனால் அந்த இடத்தை கருப்பையா, ராக்கப்பனுக்கு தெரியாமல் வேறொருவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்பு, ராக்கப்பன் பணிபுரிந்த தோட்டத்தில் போடப்பட்டிருந்த கள்ளச்சாராயம் ஊரலை போலீஸார் அழித்தனர்.

இதற்கு கருப்பையா தான் காரணம் என கருதிய ராக்கப்பன் நேற்றுமுன்தினம் மாலை கருப்பையாவை கம்பியால் தாக்கினார். அங்கு வந்த கருப்பையாவின் 15 வயது மகன் ஆத்திரத்தில் கட்டையால் ராக்கப்பனை தாக்கினார்.

இதில் சம்பவ இடத்திலேயே ராக்கப்பன் இறந்தார். இதுகுறித்து சாக்கோட்டை போலீஸார் வழக்கு பதிந்து கருப்பையா, அவரது மகனை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT