பெண்களிடம் பழகி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி என்ற சுஜி(26). இவர் முகநூல், மற்றும் இன்ஸ்டாகிராமில் கருத்துக்கள், மற்றும் போட்டோ, வீடியோக்களை பதிவிட்டு சென்னை உட்பட பல பகுதிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகியுள்ளார்.
மேலும் திருமணம் செய்வதாக பழகிய பெண்களுடன் இருக்கும் வீடியோ, போட்டோக்களை பதிவிட்டு மிரட்டி பணம் பறித்ததாக சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட பல பெண்கள் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து காசியை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது பல வழக்குகள் இருப்பதால் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர் புகார்கள் காசி மீது பெண்கள் கூறி வருவதை தொடர்ந்து இவ்வழக்கின் உண்மை நிலையை அறிய அவரை காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் போலீஸார் மனுதாக்கல் செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து காசியை நீதிமன்றத்தில் நேற்று போலீஸார் ஆனர்படுத்தினர்.
அப்போது காசியை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார். 3 நாள் விசாரணைக்கு பின்னர் மீண்டும் வருகிற 7ம் தேதி காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நேற்று காசியை போலீஸார் அழைத்து வந்தனர்.