கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் கஞ்சா விற்றவர்களை பிடிக்க முயன்ற தனிப்படை போலீஸார் இருவர் கத்தியால் குத்தப்பட்டனர். இது தொடர்பாக கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் மதுக்கடை திறக்காததை பயன்படுத்தி மாற்றுப்போதைக்கான கஞ்சா விற்பனை பரவலாக நடந்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து எஸ்.பி. ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் கஞ்சா வியாபாரிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆசாரிபள்ளம் பகுதியில் நேற்று இளைஞர்களுக்கு கஞ்சா விற்று கொண்டிருந்த கஞ்சா வியாபாரி அஜித்(30), மற்றும் 2 பேரை தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்தனர்.
அப்போது அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக தனிப்படை ஏட்டுக்கள் வீரமணி, சிவாஜி ஆகியோரை கத்தியால் அஜித் குத்தியுள்ளார். இதில் ஏட்டுக்கள் இருவரும் காயம் அடைந்தனர்.
அதே நேரத்தில் போலீஸார் அஜித்தை விரட்டி பிடித்தனர். மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த ஏட்டுக்கள் வீரமணி, சிவாஜி ஆகியோர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
ஆசாரிபள்ளம் போலீஸார் அஜித்தை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.