ஊரடங்கின் போது மதுபாட்டில்கள் திருடிய வழக்கில் கைதான டாஸ்மாக் ஊழியர்கள் உட்பட 5 பேரின் ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருச்சியில் கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதை பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக போலீஸாருக்கு புகார் வந்தது.
இப்புகாரின் பேரில் மணச்சநல்லூர் டாஸ்மாக் கடை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், விற்பனையாளர் கோவிந்தராஜ் மற்றும் திருப்பதி, சரத்குமார், தனபால் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 85 மதுபானம் மற்றும் ரூ.38 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். நீதிபதி ஜாமீன் வழங்க மறுத்தார்.
இதையடுத்து மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.