க்ரைம்

மானாமதுரை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது: 300 லிட்டர் பறிமுதல் செய்து அழிப்பு

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவரை போலீஸார் கைது செய்தனர். 300 லி., சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மதுகுடிப்போர் மதுபாட்டில் கிடைக்காமல் அலைந்து வருகின்றனர்.

இதை பயன்படுத்தி சிலர் ஆங்காங்கே கள்ளச்சாராயம் காய்ச்ச தொடங்கியுள்ளனர். மானாமதுரை அருகே கீழமாயாளி கிராமத்தில் உள்ள முந்திரி தோப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மானாமதுரை டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சேது, எஸ்ஐக்கள் மாரிக்கண்ணன், நாகராஜ் ஆகியோர் முந்திரி காட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது கீழமாயாளியைச் சேர்ந்த ராமு(55) சாராயம் காய்ச்ச ஊறல் போட்டுக் கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீஸார், 300 லி., கள்ளச்சாராயத்தை கைப்பற்றி அழித்தனர்.

இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதையடுத்து மானாமதுரை வட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியை போலீஸார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT