மதுரையில் கரோனா வைரஸ் பரவல் தடுக்க, ஊரடங்கு அமலில் இருப்பதால் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதுபானம் கிடைக்காமல் மதுப்பிரியர்கள் திண்டாடுகின்றனர். கள்ளச்சந்தையில் கிடைக்குமா என, அலைக்கின்றனர்.
இது போன்ற சூழலில் மதுரை விரகனூர் அருகே தனியார் தென்னந் தோப்பு ஒன்றில் தென்னங்கள்ளு இறக்கி விற்பதாகவும், அங்கு பலர் சென்று குடிப்பதாகவும் மதுரை நகர் காவல் துணை ஆணையர் கார்த்திக்கிற்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில் போலீஸ் தனிப்படை ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்தது. அங்கு தென்னமரங்களில் இருந்து கள் இறக்கி, அதில் மாத்திரை கலந்து விற்பது தெரிந்தது.
இது தொடர்பாக இருவரைப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள கம்மாப்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி, மாரிமுத்து என, தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 10 லிட்டருக்கு அதிகமான கள் மற்றும் மரங்களில் இருந்து கள் இறக்க பயன்படும் பானை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.