க்ரைம்

விளாத்திகுளம் அருகே 2 சிறுவர்களை கிணற்றில் தள்ளி கொலை செய்த சித்தப்பா கைது

எஸ்.கோமதி விநாயகம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அயன்பொம்மையாபுரத்தில் சிறுவர்களை கிணற்றில் தள்ளி கொலை செய்த லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

விளாத்திகுளம் அருகே அயன்பொம்மையாபுரம் காலனியைச் தெருவைச் சேர்ந்த விவசாயி ஜோதிமுத்து மிக்கேல்(50). இவரது முதல் மனைவி உஷாராணி (38). இவரது மகன் சீமான் அல்போன்சிஸ்(14). 2-வது மனைவி மகாலட்சுமி (34). இவரது மகன் எட்வின் (9).

ஜோதிமுத்து மிக்கேலின் தம்பி லாரி ஓட்டுனர் ரத்தினராஜ்(40). இவருக்கும் ஜோதிமுத்துவின் 2-வது மனைவி மகாலட்சுமிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதையறிந்த ஜோதி முத்து மிக்கேல் ரத்தினராஜை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை ரத்தினராஜ், தனது அண்ணன் மகன்களான சீமான் அல்போன்சிஸ், எட்வின் ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இரவு 7 மணியாகியும், குழந்தைகள் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த ஜோதிமுத்து மிக்கேல் மற்றும் உறவினர்கள் அவர்களை தேடினர். இதில் காட்டுப் பகுதியில் உள்ள கிணறு அருகே குழந்தைகளின் உடைமைகள் கிடந்தன.

உடனடியாக இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் பத்மநாப பிள்ளை மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் ரத்தினராஜை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.

விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அழைக்கப்பட்டு உடல்களை தேடும் பணி நடந்தது. இதில் இரவு 10 மணிக்கு சிறுவன் எட்வினின் உடல் கிடைத்தது. சீமோன் அல்போன்சிஸ் உடல் இன்று காலை மீட்கப்பட்டது.

விளாத்திகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரத்தின ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT