மதுரை அருகே பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை ஆண்டார்கொட்டாரம் அருகிலுள்ள கருப்பபிள்ளையேந்தலைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் சிவா (எ) சிவஸ்ரீ (22). இவரது நண்பர்கள் வண்டியூர் காஞ்சிவனம் (19) மற்றும் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவாவின் பிறந்த நாளையொட்டி கடந்த 17-ம் தேதி கேக் வெட்டி கொண்டாடத் திட்டமிட்டனர். இதன்படி, சிலைமான்- பனையூர் செல்லும் விலக்கு அருகிலுள்ள தனியார் தோட்டத்தில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். பெரிய வடிவிலான கேக் ஆர்டர் கொடுத்து வரவழைத்தனர்.
சிவா தனது நண்பர்களுடன் பட்டாக் கத்தியால் கேக்கை வெட்டினார். நண்பர்களும் கத்தியால் வெட்டி சிவாவுக்கு ஊட்டினர். இந்நிகழ்வை அவர்கள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பரவச் செய்தனர்.
இது பார்ப்போரை அச்சமடையச் செய்தது. இந்த வீடியோ பதிவை சிலைமான் போலீஸார் பார்த்தனர். இந்நிலையில் சிலைமான் போலீஸார் சிவா மற்றும் அவரது நண்பர்கள் காஞ்சிவனம் உட்பட 3 சிறுவர்களைப் பிடித்தனர்.
விசாரணையில், சிவாவுக்கு பெருங்குடி காவல் நிலையத்திலும், காஞ்சி வனத்துக்கு மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்திலும், 3 சிறுவர்களில் ஒருவருக்கு சிலைமானிலும் வழக்குகள் நிலுவை இருப்பது தெரிந்தது. இதையடுத்து சிவா உட்பட 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.