சென்னை தேனாம்பேட்டையில் கடந்த 3-ம் தேதி கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு சிலர் தப்பிச் சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் நேற்று 4 பேர் சரணடைந்த நிலையில் மேலும் 3 பேர் இன்று தென்காசி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
கிடந்த மூன்றாம் தேதி மாலை வேளையில் மக்கள் நடமாட்டம் பரபரப்பாக இருந்த போது அண்ணாசாலையில் ஒரு கார் மீது சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
இதில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படாவிட்டாலும் பட்டப்பகலில் நடந்த துணிகர கொலை முயற்சி போலீஸாருக்கு சவாலாக இருந்தது.
மேலும் பிரபல தாதாவைக் கொலை செய்ய சினிமா பாணியில் நடந்த முயற்சி அதுவென்பது பின்னர் நடைபெற்ற போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், பைக்கில் வந்த இளைஞர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பியதும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடிவந்தனர்.
இந்த வழக்கில் போலீஸார் தேடி வந்த சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஜான் என்ற ஜான்சன் (25), எஸ்.கமருதீன் (30), ராஜசேகர் (28), பிரசாந்த் (25) ஆகியோர் நேற்று மாலை மதுரை 6-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் 4 பேரையும் மார்ச் 11-ம் தேதி வரை மதுரை சிறையில் அடைக்க நீதிபதி முத்துராமன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், தென்காசி குற்றவியல் நடுவர் மன்றத்தில் இன்று மேலும் 3 பேர் சரணடைந்தனர். சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் (27), புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஹரீஷ் (20), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற செல்வா (25) ஆகிய 3 பேர் சரணடைந்தனர்.
இந்த 3 பேரையும் வருகிற 11-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரகதீஸ்வரன் உத்தரவிட்டார்.