க்ரைம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: லாரி ஓட்டுநருக்கு போக்சோ பிரிவில் 5 ஆண்டுகள் சிறை

செ.ஞானபிரகாஷ்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநருக்கு போக்சோ பிரிவில் புதுச்சேரி நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

புதுச்சேரி கோரிமேடு காமராஜர் நகரைச் சேர்ந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவர் வீட்டருகே விழுப்புரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குப்பன் (34) தனது வாகனத்தை நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் வீட்டில் தனியாக சிறுமி இருப்பதை அறிந்த குப்பன், அவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவானார். 2015-ம் ஆண்டு இந்தச் சம்பவம் நடந்தது.

பின்னர் சிறுமியின் தந்தை இதுபற்றி தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போதைய காவல் ஆய்வாளர் நாகராஜன், போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மேல்விசாரணையை நடத்தினார். அதையடுத்து குப்பன் என்ற ஆறுமுகம் கைதானார்.

அடையாள அணிவகுப்பு நடத்தி உறுதி செய்யப்பட்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து புதுச்சேரி முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தனபால் முன்னிலையில் போக்சோ வழக்கு விசாரணை நடைபெற்றது.

அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பாலமுருகன் ஆஜரானார். இந்நிலையில் இன்று தலைமை நீதிபதி தனபால், குற்றம் சாட்டப்பட்ட குப்பன் குற்றவாளி எனக் கூறி 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரமும் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT