புதுச்சேரியில் நடைபயிற்சி மேற்கொண்ட கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் செல்போனை மர்ம நபர்கள் இருவர் பறித்துச் சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், புதுச்சேரி தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று (மார்ச்-2) இரவு அவர் புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அவருடன் பாதுகாப்பு அதிகாரி ரத்தினவேல் சென்றார். அப்போது அமைச்சரின் செல்போனை உடன் சென்ற ரத்தினவேல் கையில் வைத்திருந்தார். அவர்கள் இருவரும் புதுச்சேரி தீயணைப்பு நிலையம் அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் அமைச்சர் கமலக்கண்ணனின் செல்போனை திடீரென பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பறிக்கப்பட்ட செல்போனின் மதிப்பு ரூ.20 ஆயிரமாகும்.
இதனால் அதிர்ந்துபோன அமைச்சர் கமலக்கண்ணன், இது தொடர்பாக ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.