திருப்பாச்சேத்தி அருகே விவசாயியைக் கொலை செய்த 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த சிலர் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காட்டில் தங்கி விவசாய நிலங்களில் ஆட்டுக்கிடை போட்டு வந்தனர். அவர்கள் ஆவரங்காட்டைச் சேர்ந்த முனியாண்டி என்பவரின் வீட்டில் தங்கியிருந்ததால், அவர் கூறிய விவசாயிகளின் நிலங்களுக்கு மட்டுமே ஆட்டுக்கிடை அமைத்தனர். இந்நிலையில் ஆவரங்காடு அருகே கச்சநத்தத்தைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவர் தனது நிலத்தில் ஆட்டுக்கிடை அமைக்க வேண்டுமெனக் கேட்டுள்ளார்.
இதற்கு முனியாண்டி எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் 2010 ஆகஸ்ட் 10-ம் தேதி சந்திரகுமார், ஆவரங்காட்டைச் சேர்ந்த அல்லிமுத்து உள்ளிட்டோர் அப்பகுதியில் பேசிக்கொண்டிருந்தனர்.
அங்கு வந்த முனியாண்டி மற்றும் அதே பகுதியைச் சேர்நத சேகர் (39), பூசைமணி (32), பாண்டிவேல் (38), வீரபத்திரன் (35), அழகுபாண்டி (30), பழனியாண்டி (40), ராஜாங்கம் (45), முத்துப்பாண்டி (23), ராமாயி (60), மைக்கேல், கணேமன் (32), கருப்பையா (63), செல்வராஜ் (35) உள்ளிட்ட 17 பேர் சேர்ந்து அல்லிமுத்துவைக் கொலை செய்தனர்.
இதுகுறித்து திருப்பாச்சேத்தி போலீஸார் வழக்குப் பதிந்து 18 பேரைக் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி கார்த்திகேயன், குற்றவாளிகள் சேகர், கருப்பையா இறந்த நிலையில் மற்ற 16 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.